இந்தியாவில் பாம்பையே மூலவராகக் கொண்ட ஒரே கோயில் நாகர்கோவில் நாகராஜா கோயில் தான்.
நாக பிரதிஷ்டையும், சர்ப்பக்காவும் கேரளாவிற்கு உரிய சிறப்பம்சங்களாகும். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கேரளாவில் 15 ஆயிரம் சர்ப்பக்காவுகள் இருந்தன.
இன்று மன்னார் சாலை, வெட்டுக்காடு, பாம்பன் மேக்கோடு ஆகியவை பிரசித்தி பெற்ற சர்ப்பக்காவுகளாகும்.
மன்னார்சாலையில் ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து நாகபூஜை செய்யும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் திருவேற்காட்டில் எழுந்து அருளியுள்ள கருமாரியம்மன் கருநாகமாக தோன்றினார் என்று தலபுராண வரலாறு கூறுகிறது.
இங்கு கருமாரியம்மன் ஐந்து தலை நாகத்தின் குடை நிழலில் அமர்ந்து காட்சி தருகிறார்.
திருச்செங்கோடு மலைச் சரிவில் 60 அடி நீளத்தில் பாம்பு புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் பொங்கல் இட்டு வழிபாடு நடத்துகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சமுதாயத்தினர் நாகத்தை குலதெய்வமாக கொண்டு ஒடுப்பறை என்ற இடத்தில் கோயில் கட்டி வழிபடுகின்றனர்.
இப்படி நாக வழிபாட்டுக்காக பல கோயில்கள் இருந்தாலும் நாகர்கோவில் நாகராஜா கோயில் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.
இந்த கோயிலின் பெயரை கொண்டுதான் நாகர்கோவில் விளங்குகிறது.
மிக பழமையான இந்த கோயில் எப்போது யாரால் கட்டப்பட்டது என்பது பற்றி தகவல் இல்லை.
எனினும் ஒரு பழமையான கதை இந்த கோயில் பற்றிய தோற்றம் பற்றி கூறப்படுகிறது.
தலவரலாறு
கோயில் இருக்கும் இடம் பண்டைய காலத்தில் புல்லும், புதரும் நிறைந்த இடமாக இருந்தது.
இங்கு இளம்பெண் ஒருவர் புல் அறுத்து கொண்டிருந்த போது அவரது அரிவாள் ஐந்து தலை நாகத்தின் தலையில் பட்டு இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது.
இதை கண்டு அஞ்சிய பெண் கிராம வாசிகளை அழைத்து வந்தார். மக்கள் உடனே அங்கு கோயில் கட்டி வணங்கியதாகவும், பிற்காலத்தில் களக்காடு மன்னரின் தீராத தொழு நோய் இந்த கோயில் வழிபாட்டின் மூலம் குணம் அடைந்ததாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது.
இந்த கோயிலின் உள்ளே செல்லும் போது உள்வாசலின் இருபுறமும் அமைந்திருக்கும் ஐந்து தலை நாகத்தின் படம் எடுக்கும் வடிவிலான சிலை அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
இவை தர்னேந்திரன் என்ற நாகராஜன் என்றும், பத்மாவதி என்ற நாகராணி எனவும் நம்பப்படுகிறது.
இந்த கோயிலின் கருவறை இன்றும் ஓலை கூரையின் கீழ்தான் உள்ளது. இந்த கூரையில் ஒரு பாம்பு காவல் புரிவதாக நம்பப்படுகிறது.
இந்த ஓலைக்கூரை மாற்றி கட்டும் போது ஒரு பாம்பு வருவது வழக்கமாக உள்ளது.
மூலவர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாக இருக்கும். மூலவர் இங்கு தண்ணீரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அந்த தண்ணீர் ஊற்றில் இருந்து எடுக்கப்படும் மண்தான் இக்கோயிலின் முக்கிய பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
இது ஆறு மாதகாலம் கறுப்பாகவும், ஆறு மாதகாலம் வெள்ளையாகவும் காட்சி தருகிறது. இங்கிருந்து மண் எடுக்க எடுக்க குறையாமல் இருப்பது அதிசயமாகும்.
திருமணம் நடக்க வேண்டியும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டியும் பெண்கள் இங்கு நாகருக்கு பால் அபிஷேகம் நடத்துகின்றனர்.
பால் பாயாச வழிபாடு இங்குள்ள முக்கிய வழிபாடு ஆகும். பால், உப்பு, நல்ல மிளகு, மரப்பொம்மைகள் போன்றவற்றையும் பக்தர்கள் இங்கு காணிக்கையாக வழங்குகின்றனர்.