சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காவலாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் காரை நேரு நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 50). இவர், கால்நடைத்துறையில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் பொம்மை படம் காண்பிப்பதாக ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு கடத்தி சென்றுள்ளார். பின்னர் அவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை முடிந்து, நீதிபதி கலைப்பொன்னி தீர்ப்பளித்தார். அதில், சிறுமியை பாலியல் பாலாத்காரம் செய்ததால் 20 ஆண்டுகளும், சிறுமியை வெளியே விடாமல் தடுத்து வைத்ததற்கு ஒரு ஆண்டும் என மொத்தம் 21 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
அரசு தரப்பில் போக்சோ சிறப்பு வக்கீல் சந்தியா சுரேஷ்குமார் ஆஜராகி வாதாடினார்.