28.6.2022 - செவ்வாய் சர்வ அமாவாசை

ஒரு வருடம் இரண்டு அயணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில், உத்தராயணம் மிகச் சிறந்த புண்ணிய காலமாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பீஷ்மர், இந்த உத்தராயன புண்ணிய காலம் வரும்வரை காத்திருந்து தனது உயிரைத் துறந்தார் என்று மகாபாரதம் சொல்கிறது. 

தை மாதம் முதல் ஆனி மாதம் வரை ஆறு மாதங்கள் உத்தராயண புண்ணிய காலம். இதில், ஆனி மாதம் கடைசி மாதம். அதில் வருகின்ற அமாவாசைக்கு ஒரு சிறப்பு உண்டு. அதிக நாட்கள் அதாவது, 32 நாட்கள் உள்ள மாதம் ஆனி மாதம். அமாவாசை புண்ணிய காலம் செவ்வாய்க்கிழமை வருகிறது. 

இதில் அமாவாசைக்கு முதல் திதியான சதுர்த்தசியும் செவ்வாய்க்கிழமையும் கலந்து வருவதால் இந்த புண்ணிய தினத்தை கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி தினமாக அனுஷ்டிக்கின்றனர். 

செவ்வாய்க்கிழமையும் தேய்பிறை சதுர்த்தசியில் சேர்ந்தால் அந்த நாள் ரொம்ப விசேஷமான நாள். சாபங்களையும் பாபங்களையும் துடைத்து தூய்மையாக்கும் நாள்.

சில குடும்பங்களில், பரம்பரை பரம்பரையாக கொடிய வினைகள் சூழ்ந்து நிம்மதி குறைந்து போகும். எல்லா சுப காரியங்களிலும் தடைகள் ஏற்படும் குடும்பங்களில் விபத்துக்களும் அகால மரணங்களும் கூட நிகழும். இதுபோன்ற கொடிய பாவங்கள் தீர கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி நாளில் பிதுர் தேவதைகளை வணங்க வேண்டும்.

கடற்கரை, ஆற்றங்கரை அல்லது நீர்நிலை உள்ள தலங்களுக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். குலதெய்வ வழிபாடு முக்கியம். இன்றைக்கு காலதேவனை நினைத்து எம தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானது. 

இதன் மூலம் ஆயுள் தோஷம் நீங்கும். மிதுன ராசியில், இந்த அமாவாசை நிகழ்வதால் முன்னோர்களை நினைத்து தில தர்ப்பணம் செய்பவர்களுக்கு எல்லா கிரகங்களும் துணை புரியும். ஆசைகள் பூர்த்தியாகும். சுப காரியங்கள் தடையின்றி நடக்கும்.
 
காலதேவனின் 3ஆவது ராசியில், (சகோதர ராசி) அமாவாசை நிகழ்வதால், அவசியம் நீத்தார் வழிபாடு நடத்த வேண்டும் அதன் மூலமாக குடும்பத்தில், சகோதர ஒற்றுமை பெருகும்.

அதற்கு காரணம், இன்று செவ்வாய்க்குரிய மிருகசீரிஷம் நட்சத்திரம். அதில் சந்திரன் பிரவேசிக்கும் பொழுதுதான் அமாவாசை நிகழ்கிறது. செவ்வாய்க்கிழமை சகோதரகாரகன் அல்லவா. எனவே குடும்ப ஒற்றுமை ஓங்கும். காலையில் வீட்டைத் தூய்மைப்படுத்தி முன்னோர்களை வரவேற்பதற்காக கூடுதல் விளக்கு ஒன்று ஏற்றுங்கள். நேர்மறை சக்திகளை ஆகர்ஷணம் செய்ய புதிய மாவிலைகளை வீட்டின் முன்னால் கட்டுங்கள். 

புரோகிதரை அழைத்து எள்ளும் நீரும் என தில தர்ப்பணம் செய்யுங்கள். அப்படி இயலாவிட்டால் வாழைக்காய், அரிசி, பருப்பு, தட்சணை என கோயில் குருக்கள் அல்லது புரோகிதருக்கு, இல்லையென்றால் வைதீகர்களுக்கு, அதுவும் இல்லையென்றால் வயதான ஒருவருக்கு தாருங்கள். இயன்றால் அன்றைக்கு ஒரு பெரியவரை அழைத்து வீட்டில் சாப்பாடு போட்டு உங்களால் இயன்ற தட்சணை தாருங்கள். முன்னோர்கள் ஆசி கட்டாயம் கிடைக்கும்.

1.7.2022 - வெள்ளி அமிர்த லட்சுமி விரதம்


வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உரிய நாள். பொதுவாகவே வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியை வணங்கி வழிபாடு நடத்துவது நீங்காத செல்வம் நிறைந்திருக்கும்படியான வாழ்க்கையைத் தரும். வருடத்தில் பல நாட்கள் மகாலட்சுமிக்கு உகந்த விரத நாட்களாக நம்முடைய முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். 

அதில், ஆனி மாதம் வருகின்ற மகாலட்சுமி விரதத்திற்கு அமிர்த லட்சுமி விரதம் என்று பெயர். அமிர்தம் என்றால் இறப்பில்லாத மருந்து என்று பெயர். சுவைமிக்கது என்றும், சாவா மருந்து, மூவா மருந்து என்றும் பல பெயர்கள் உண்டு. அதே போல், மாறாத நிலைக்கு அமிர்தம் என்றும், ஒருவனுக்கு மாறாத, நிலையான, சுவையான வாழ்க்கை கிடைத்தால் அந்த வாழ்க்கைக்கு அமிர்த வாழ்க்கை என்றும் பெயர்கள் உண்டு.

மகாலட்சுமி பாற்கடலில் தோன்றியவள் என்பதினாலேயே இந்த அமிர்தலட்சுமி விரதம் மிகச் சிறப்பானது. நோய்நொடிகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்க்கையும் நீண்ட ஆயுளையும் பெறுவதற்கு சாஸ்திரத்தில் இந்த விரதம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்நாட்களில் வீட்டில் கலசம் வைத்து, லட்சுமி பூஜை செய்ய வேண்டும். அன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயார் சந்நதியில் விளக்கு வைத்து வர வேண்டும். மாலையில் வீட்டில் விளக்கு வைத்து லட்சுமி சகஸ்ரநாமம், ஸ்ரீசூக்தம் முதலிய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யலாம். குறைந்தபட்சம் கீழே உள்ள ஸ்லோகத்தை அவசியம் பாராயணம் செய்யவும்.

லஷ்மீம் ஷீர ராஜ சமுத்திர தனயாம் ஸ்ரீரங்க தாமேஸ்வரீம்தாசி பூத சமஸ்த தேவ வனிதாம் லோகைக தீபாங்குராம்ஸ்ரீமன் மந்த கடாக்ஷ லப்த பிரமேந்திர கங்காதராம்த்வாம் திரை லோக்ய குடும்பினிம் சரஸிஜாம் வந்தே முகுந்தப்ரியாம்