காஞ்சனகிரி மலைக்கோயில் உண்டியலை கொள்ளையடித்த திருடன் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளான். கொள்ளையடித்த பணத்தை உண்டியலில் திரும்பவும் காணிக்கையாக செலுத்தியுள்ளான்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே புராணப்பெருமை மிக்க காஞ்சனகிரி மலையில் சிவன் கோயில் உள்ளது. இம்மலையில் வசித்த கஞ்சனன் என்னும் அரக்கன் சிறந்த சிவபக்தன். திருவலம் வில்வநாதீஸ்வரர் தரிசனத்துக்காக கடும் தவம் புரிந்தும் அவர் காட்சியளிக்கவில்லை. இதையடுத்து திருவலம் கோயில் பூஜைக்காக பொன்னை நதியில் தண்ணீர் எடுக்க வந்தவரை துன்புறுத்தி விரட்டினான்.
அவர் சிவனிடம் முறையிட, இறைவன் நந்தீஸ்வரரை காஞ்சனகிரிக்கு அனுப்பி அரக்கனை வதம் செய்தார். இதற்கு சாட்சியாக நந்திபாதம், கஞ்சனின் ரத்தத்துளிகள் விழுந்து உருவான சுயம்பு லிங்கங்கள் காஞ்சனகிரியில் இன்னமும் உள்ளன. இம்மலையில் உள்ள காஞ்சனகிரி ஈஸ்வரன் கோயிலில் சித்ராபவுர்ணமி விழா மிகவும் சிறப்பாக நடை பெறும். இந்த ஆண்டு ஏப்.16ம் தேதி சித்ராபவுர்ணமி கோலாகலமாக நடந்தது. மறுநாள் (17ம் தேதி) இரவு கோயில் உண்டியல் உடைக்கப்பட்டது. இது குறித்து சிப்காட் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை மாதாந்திர வழக்கமாக கோயில் உண்டியல் திறக்கப்பட்டது. அதில், ஒரு கடிதத்துடன் பத்தாயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
அக்கடிதத்தில், நான் சித்ரா பவுர்ணமி கழிந்த மறுதினம் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடினேன். அப்போதிருந்து எனக்கு மனசு சரியில்லை. நிம்மதியில்லை. வீட்டில் நிறைய பிரச்னை வந்தது. எனவே மனம் திருந்தி எடுத்த பணத்தை அதே உண்டியலில் ரூ.10 ஆயிரம் போட்டுவிடுகிறேன். எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள். கடவுள் என்னை மன்னிப்பாரா தெரியாது” என்று எழுதியிருந்தது.
கோயில் நிர்வாகிகள் அந்த கடிதத்தையும் பணத்தையும் சிப்காட் போலீசாரிடம் தெரிவித்தனர்.
சிவன் சொத்து மேல் கண் வைத்தால் சோதனை தான் (சிவன் சொத்து அபகரித்தால் குல நாசம்) என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது என்று பக்தர்கள் பரவசமாக தெரிவிக்கின்றனர்.