முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (30-ந் தேதி) ராணிப்பேட்டைக்கு வருவதையெட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொள்கிறார். 29-ந் தேதி திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழாவிலும், 30-ந் தேதி காலை 9.30 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து, ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
கர்ப்பிணிகளை அழைத்துவர வேண்டாம்
தமிழக முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பயனாளிகளை 7 வட்டாரங்களில் இருந்து பஸ்கள் மூலம் அழைத்து வரவேண்டும். சுமார் 200 பஸ்கள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8.30 மணிக்கு விழா அரங்க மேடைக்கு பயனாளிகளை அழைத்து வந்து இருக்கையில் அமர வைக்க வேண்டும். மேடைக்கு பயனாளிகளை தனியாக அழைத்து வர வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்து அவர்களை அழைத்துவர வேண்டும்.
பயனாளிகளில் கர்ப்பிணிகள், கைக்குழந்தை உள்ள பெண்கள் மற்றும் முதியவர்களை அழைத்து வர வேண்டாம். ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் கண்காட்சி அரங்குகள் அமைத்திட வேண்டும். தோட்டக்கலை துறையினர் நுழைவாயில் பகுதியினை அழகு படுத்திட வேண்டும்.
இவர் அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.