இது உயர்ந்த ஏகாதசி. இந்த ஏகாதசியில் தண்ணீர்கூட அருந்ததக்கூடாது (நீர் கூடப் பருகாமல் இருத்தல்).
எவன் ஒருவன் இந்தத் தினத்தில் தண்ணீரையும் அருந்தாமல் நிர்ஜலமாக உபவாஸம் விதிப்படி இருக்கிறானோ அவன் ஓராண்டு வரும் ஏகாதசிகளில் உபவாஸம் இருந்த பயனைப் பெறுவான்.
இந்த ஏகாதசியில் ச்ரமபட்டு விரதம் அநுஷ்டித்து விட்டால் ஸமஸ்த ஏகாதசிப் பலனும் கிடைத்துவிடும்.
தர்மபுத்ரன், கலியின் கொடுமையைப் பார்த்தார்.
எங்கும் களவு.
எங்கும் சண்டை.
தர்மமே சாய்ந்து விட்டது.
அதர்மம் ஓங்கி நிற்கிறது.
பிறர் மனைவியை அபகரித்தல்.
கள் குடித்தல்.
வீண் சண்டை செய்தல், மனைவிகள் புருஷர்களை படுத்துதல், கொலை எல்லாம் கண்டார்.
இதில் நாமும் வாஸம் செய்ய தலைவிதி ஏற்பட்டு விட்டதே எனக் கலங்கினார்.
இப்படிவரும் பாபத்தை அகற்ற வழியும் சுலபமாக இல்லையே எனவும் வருந்தினார்.
வியாச பகவானை சரணடைந்தார்.
மக்கள் உய்ய சுலபமான வழியைக் கூற வேண்டுமேன ப்ரார்த்தித்தார்.
வியாச பகவானும் சிறிது ஆழ்ந்து ஆலோசித்துக் கூறலானார். "எல்லா பாபங்களையும் அகற்ற ஏகாதசி ஒன்றுதான் சுலபமான உபாயம். இதைத்தவிர வேறு வழி இல்லை" என்றார்.
உடனே தர்மபுத்ரர் "தனது ராஜ்யத்தில் எல்லோரும் ஏகாதசி விரதமிருக்க வேண்டும்" என்று பறை சாத்தினார்.
அனைவரும் பயந்து உபவாஸம் இருக்க முயற்சித்தனர்.
இதைக் கண்ட பீமஸேனன் வருத்தமடைந்தான்.
இவனோ வயறுதாரி.
எவ்வளவு உண்டாலும் த்ருப்தியடையாதவன்.
மேலும் மேலும் உண்ணாலும் இவனது வயிற்றுள்ள அக்நி த்ருப்தி அடைவதில்லை.
ஆக இவன் எப்படி ஒவ்வொரு ஏகாதசியும் உபவாஸமிருக்க முடியும் என்று கலங்கி வியாசரிடம் முறையிட்டான்.
"தங்களது உபதேசம் என்னை உயிருடன் அழித்து விடுகிறது. எனது வயிற்றில் உள்ள அக்நிக்கு வ்ருகம் எனப்பெயர். எனவே என்னை விருகோதரன் என அழைப்பர். இந்த அக்நி அளவற்ற அன்னத்தை உண்டால்தான் சாந்தமடைகிறது. பகாஸுரனை விட நான் அதிகம் உண்ண வேண்டும். உங்களுக்கும் இது நன்கு தெரியும். ஆக எல்லா ஏகாதசிகளிலும் உபவாஸம் இருப்பது கடினம். தினத்தில் ஒரு வேளை புசித்து இரவு உண்ணாமல் இருப்பதே எனக்கு கஷ்டம். எனவே ஆண்டுக்கு ஒரு முறை ஒரு தினம் எப்படியாவது உபவாஸம் இருக்க முயற்ச்சிக்கிறேன். ஆனாலும் அந்த ஒரு தின உபவாஸமே அனைத்து ஏகாதசி உபவாஸப்பலனையும் அளிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஏகாதசியை செய்து எனக்கு கூற வேண்டும்" என்று கேட்டான்.
வியாசரும் திவ்ய சக்ஷுஸ்ஸால் பார்த்து, "நிர்ஜல ஏகாதசியன்று ஒரு நாள் உபவாஸம் இருப்பாயாக. ஜலமும் அருந்தாமல் விரதத்தை நடத்த வேண்டும். சுக்ல ஏகாதசி பலனும் கிட்டும். முறைப்படி இருந்து த்வாதசி பாரணை செய். பகவானை இவ்வாறு பூஜை செய். உன் அபிமதம் ஸித்திக்கும்" என்றார்.
பீமனும் இவ்வாறு வருடத்துக்கு ஒரு முறை உபவாஸம் இருந்து பகவானை பூஜித்தான்.
இதை ஸ்ரீக்ருஷ்ணன் வியாசருக்கு உரைத்த மர்மம்.
இப்படி பீமன் இதில் நடந்தபடியால் பீம ஏகாதசி எனப் பெயர் வழங்கிற்று.
இவ்வாறு இருந்து பாரணை செய்தபடியால் பாண்டவ த்வாதசி என த்வாதசிக்குப் பெயரும் வந்தது.
இந்த ஏகாதசியை அனுஷ்டித்தால் 24 ஏகாதசி விரதங்களையும் அனுஷ்டித்த பலன் கிட்டும் என பீமனுக்கு வேதவியாசர் கூறியுள்ளார்.
பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி பூஜைசெய்வது ஆகும்.
இந்தநாளில் உள பூர்வமாக பீமனையும் இணைத்து வழிபாடுசெய்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிடைக்கும் .
வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரதபலன் கிடைக்கும்.
இதை அனுஷ்டிப்பவர்கள் யமலோகம் காணமாட்டார்கள்.
இந்த ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.
திருவாய்மொழி(520).....!!!
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழு வல்வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.
திருவாய்மொழி 5.8.5
உன் கண்ணழகிலே ஈடுபட்டுப் பலவிதமான செயல்களைச் செய்யும் நான் உன் திருவடிகளைச் சேரும்படிப் பார்த்தருள வேண்டும் என்கிறார்.
அழுவது, தொழுவது, ஆடிப் பார்ப்பது, பாடுவது, அலற்றுவது, என்னைத் தழுவி இருக்கும் காதலாகிற ப்ரபலமான பாபத்தால் அவன் வரக்கூடிய பக்கங்களைப் பார்த்து அங்கு வாராமையாலே வெட்கப்பட்டுத் தலை கவிழ்ந்திருப்பேன். மிகுதியாய் அழகாய் இருக்கும் நீர் நிலங்களையுடைய திருக்குடந்தையிலே சயனித்திருப்பவனாய் சிவந்த தாமரை போன்ற திருக்கண்களையுடையவனே! உன்னைத் தொழுபவனான என்னை உன் திருவடிகளை அடையும்படி ஒரு நல்ல வழியை நீயே பார்க்க வேண்டும்.