Three people, including mercenaries, have been arrested in connection with the murder of a couple
அரக்கோணம் அருகே தம்பதி கொலை வழக்கில் கூலிப்படையினர் உள்பட 3 பேரை போலீசர் கைது செய்தனர். அவர்கள் ஓடும் காரிலேயே இருவரையும் கொலை செய்து பிணங்களை வீசிச்சென்றதாக தெரிவித்துள்ளனர்.
கணவன்- மனைவி கொலை
காஞ்சீபுரத்தை அடுத்த புஞ்சை அரசந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 52). இவரது மனைவி ராணி (47). இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அடித்து கொலை செய்யப்பட்டு அரக்கோணம் அருகே உள்ள சாலை கிராமம் ஏரி பகுதியில் புதரில் வீசப்பட்டு கிடந்தனர். இதுகுறித்து அரக்கோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆகியோர் உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரனை மேற்கொண்டதில் அவர்களில் 2 பேர் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பதும், மாணிக்கம்-ராணியை அவர்கள் கொலை செய்ததும் தெரிய வந்தது.
அதன் விவரம் வருமாறு:-
சூனியம் வைத்ததாக...
ராணியின் மகள் சசிகலா குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களாக தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார். சசிகலாவின் கணவர் சாய்ராம் சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். இதற்கு சசிகலாவின் பெற்றோர் ராணி, மாணிக்கம் ஆகிய இருவரும் சேர்ந்து சூனியம் வைத்திருக்கலாம் என சாய்ராம் குடும்பத்தினர் எண்ணி கோபத்தில் இருந்துள்ளனர். இதனால் கோபத்தில் இருந்த சாய்ராம் தம்பி தரணி, மாணிக்கத்தையும், ராணியையும் கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார்.
இதற்காக திருவள்ளூர் மற்றும் திருத்தணி பகுதிகளை சேர்ந்த கூலிப் படையினரிடம் பேசியுள்ளார். அதில் திருத்தணியை சேர்ந்த சுனில் என்பவரது தலைமையிலான கூலிப்படையினர் கடந்த 23-ந் தேதி மாலை மாணிக்கத்தின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு தரணி தெரிவித்தபடி, கூலிப் படையினர் மாணிக்கத்திடம் உங்களுக்கு கடன் பிரச்சினை இருப்பது எங்களுக்கு தெரியும். திருத்தணியில் ஒருவர் கடன் தருகிறார். எங்களுடன் வந்தால் உங்களுக்கு கடன் பெற்று தருகிறோம் என கூறி உள்ளனர்.
ஓடும் காரிலேயே கொன்றனர்
அதை உண்மை என நம்பிய மாணிக்கம், ராணி ஆகிய இருவரும் அவர்களுடன் காரில் சென்றனர். திருத்தணி அருகே சென்றபோது அந்த கும்பல், ஓடும் காரிலேயே கணவன், மனைவியை சரமாரியாக தாக்கி கொலைசெய்து, அவர்களது உடல்களை அரக்கோணம் அருகே உள்ள கைலாசபுரம் சாலை கிராமத்தில் உள்ள ஏரி பகுதியில் வீசி சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.