இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது.
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து எல்.ஐ.சி.யின் பொதுப்பங்கீடு வெளியீட்டில் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கான பங்குகள் முழுமையாக வாங்கப்பட்டுவிட்டது. அதன் அடுத்தகட்டமாக பாலிசிதாரர்கள், எல்.ஐ.சி., ஊழியர்கள், சில்லரை முதலீட்டாளர்கள் ஆகியோருக்கான பங்கு விற்பனை இன்று தொடங்கி வரும் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
எல்.ஐ.சி.யின் ஒவ்வொரு பங்கினையும் தலா 902 ரூபாய் முதல் 949 ரூபாய் வரையான விலையில் மத்திய அரசு விற்பனை செய்கிறது. இதன் மூலம் சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் பாலிசிதாரர்கள் பங்குகளை வாங்க டிமேட் கணக்கு வைத்திருப்பது அவசியம். குரோ (Groww), அப்ஸ்டாக்ஸ் (Upstox), ஜெரோதா (Zerodha) ஆகிய பல செயலிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்குகளின் விலையிலிருந்து எல்.ஐ.சி ஊழியர்களுக்கு ரூ.45-ம் பாலிசிதாரர்களுக்கு ரூ.60-ம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.