ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022- ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாளன்று மாவட்ட அளவில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு. பாராட்டு சான்றிதழ் வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 19-ந் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
போட்டியில் பங்கேற்கும் கல்லூரி, பள்ளி மாணவர்களை இரண்டு பேர் வீதம் அந்தந்த கல்லூரிகளில் முதல்வர் மற்றும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே தேர்வு செய்து போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்பட உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்பட உள்ளன.
பள்ளி மாணவர்களுக்கான போட்டி காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டி மதியம் 2 மணிக்கும் தொடங்கப்படும்.
இப்போட்டிகள் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெறும். மாணவ- மாணவிகள் இப் போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.