சென்னையில் இருந்து சுமார் 15 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிகொண்டு லாரி ஒன்று வேலூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, சாலையை கடக்க முயன்ற பசு மாடுகளின் மீது மோதியதில் சாலையோரமாக கவிழ்ந்த லாரியிலிருந்து சுமார் 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் சாலையில் வெள்ளம் போல் பெருகெடுத்து ஓடியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராணிப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ பற்றாமல் இருக்க லாரியின் மீது நுறைக்கலவையை தெளித்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர், கிரேன் மூலம் டேங்கர் லாரி பாதுகாப்பாக அகற்றப்பட்டது. இந்த விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை காவேரிப்பாக்கம் காவல்துறையினர் சரி செய்தனர்.
விபத்து குறித்து அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மீட்பு பணிகளை பார்வையிட்டதோடு, அருகில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் , நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை ஏறி வரும் சூழலில் சுமார் 5 ஆயிரம் லிட்டர் எரிபொருள் சாலையில் வீணாக கொட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.