அரக்கோணம் அருகே தக்கோலம் ரயில் நிலையத்தில் திருப்பதி-புதுச்சேரிசெல்லும் மெமூ எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை கோட்ட மேலாளருக்கு எம்எல்ஏ சு.ரவி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இதுகுறித்த விவரம் வருமாறு: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலம் ரயில் நிலைய பகுதியை சுற்றி சுமார் 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, அரக்கோணம், திருத்தணி, ரேணிகுண்டா, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள், நேயாளிகள், அரசு, தனியார் வேலைக்கு செல்லுபவர்கள் என பலர் ரயில்களில் செல்வதற்கு வசதியாக, திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் மெமூ எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு செல்லும் மெமூ எக்ஸ்பிரஸ் ரயில், தக்கோலம் ரயில் நிலையத்தில் நின்று சென்றால் வசதியாக இருக்கும்.
மேலும், தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுக்கும் ஆட்டுப் பாக்கத்தில் உள்ள அரசு கல்லூரிக்கு வரும் பேராசிரியர்கள், மாணவர்களுக்கும் இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.எனவே, தக்கோலம் ரயில் நிலையத்தில் திருப்பதி- புதுச்சேரி மெமூ எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்குரயில்வே சென்னை கோட்ட மேலாளருக்கு, அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி கோரிக்கை மனு அளித்தார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட ரயில்வே கோட்ட மேலாளர், தங்கள் கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.