Fraud that gives multi crore worth of iridium


ராணிப்பேட்டை அருகே உள்ள சாத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் ஷகிர் (வயது 29). இவர் சென்னையில் எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்தபோது அவருக்கு தாம்பரத்தை சேர்ந்த ராஜன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் ராஜன் பண்ருட்டி புலவன் குப்பத்தை சேர்ந்த உலகநாதன் (வயது 44), நெய்வேலியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 52) ஆகிய 2 பேரை ஷகீருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இவர்களிடம் விலை மதிக்கத்தக்க இரிடியம் உள்ளது, இதை குறைந்த விலைக்கு வாங்கினால் கோடிக்கணக்கில் விற்று பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய ஷகீர் தனது உறவினர் சீனிவாசனிடமும் கூறி 2 பேரும் சேர்ந்து ரூ.3 லட்சத்திற்கு இரிடியத்தை விலை பேசினர். இதில் முதல் தவணையாக ரூ. 1 1/2லட்சத்தை ராஜன் மூலமாக உலகநாதனிடம் கொடுத்தனர். மேலும் ஆன்லைன் மூலமாக ரூ.14, ஆயிரமும் அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில் புலவன்குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து இரிடியத்தைப் பெற்றுக் கொள்ளும்படி உலகநாதன் ஷகீருக்கு தகவல் தெரிவித்தார். இதன்படி நேற்று ஷகீர் மற்றும் சீனிவாசன் அங்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பார்சல் போன்ற ஒரு பொருளை காண்பித்து இதில் இரிடியம் உள்ளது மீதி பணத்தை கொடுத்துவிட்டு பெற்று செல்லுமாறு கூறினர். அதற்கு ஷகீர் பணம் கொண்டு வரவில்லை, இரிடியத்தை தருமாறும் பணத்தை பின்னர் அனுப்பி விடுவதாக தெரிவித்துள்ளார். இல்லையேல் வாங்கிய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.

அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த உலகநாதன், பாலசுப்பிரமணியன் ஆகிய 2 பேரும் சேர்ந்து ஷகீர் மற்றும் சீனிவாசனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் ஷகிர், சீனிவாசன் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் ஷகீர் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உலகநாதன் காட்டிய பார்சலில் இரிடியம் ஏதுமில்லை. ஒரு அலுமினிய உருளையை மட்டும் வைத்து பார்சல் செய்து இருந்தது தெரியவந்தது

இரிடியம் தருவதாக மோசடி செய்த 2 பேர் மீதும் முத்தாண்டிக்குப்பம் போலிசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

கைதான உலகநாதன் ஏற்கனவே ரவுடி என்பதும் பாலசுப்ரமணியன் என்.எல்.சி.யில் டெக்க்னிஷியன் ஆக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இது தொடர்பாக மேலும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சென்னை தாம்பரத்தை சேர்ந்த ராஜன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.