World Women's Day Festival at Wallajah Best Achievement Award for DIG Annie Vijaya IPS
உலக மகளிர் தினம் நேற்று வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா மகளிர் கலைக் கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் பரமேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். இதில் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு சார்பில் வேலூர் டிஐஜி ஆனி விஜயாவிற்கு சிறந்த சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் மிகப்பெரிய தன்னார்வ தொண்டு நிறுவனமான சப்பர் ஏ பேக்கின் இயக்குநர் செசி வியா ஹெம்ஸ்பையர் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு நிர்வாகியும். உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான வரபிரசாத் ஆகியோர் வழங்கினர்.
அப்போது, டிஐஜி ஆனி விஜயா பேசியதாவது:
மகளிர் தினம் கொண்டாடும் இவ்வேளையில் மிகப்பெரிய விருது கிடைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியாகும். மக்களோடு பின்னிப்பிணைந்து பணியாற்றும் ஒட்டுமொத்த காவல் துறைக்கும் இவ்விருதை சமர்ப்பிக்கிறேன். கடமை உணர்வுடன் மிக நேர்மையாக பணியாற்றி உத்வேகம் பெற்றுள்ளேன்.
மாணவிகள் அசாத்தியமான துணிச்சலுடன் தவறை சுட்டிக்காட்டும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். எதிர்கால வாழ்க்கை கனவை நிறைவேற்றிட நிகழ்காலத்தில் சாதிக்க வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக கடுமையான உழைப்பின் மூலமே வெற்றியை அடைய முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இதில் எஸ்பி தீபா சத்யன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.