ஆற்காட்டில் பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆற்காடு மாசாப்பேட்டை அண்ணாநகர் பகுதி 2ல் நகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்போது 320 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஏற்கனவே தலைமை ஆசிரியராக என்.எஸ். கீதா என்பவர் இருந்தார். அவர் பணியில் இருந்த போது அவர் மீது மாணவர்களை அசிங்கமாக திட்டுவது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. அவரை மாற்ற கோரி மாணவர்களும் பெற்றோர்களும் பொது மக்களும் இணைந்து பள்ளியின் கேட்டை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் சம்பவ இடத்திற்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக் கப்பட்டதால் தலைமை யாசிரியை என்.எஸ்.கீதா பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் மீண்டும் மீண்டும் பணியில் சேர்ந்த தலைமையாசிரியை என்.எஸ். கீதா அண்ணா நகர் பகுதி 2ல் உள்ள நகராட்சிதுவக்கப் பள்ளிக்கு மீண்டும் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ள தாகவும், அவர் நேற்று மீண்டும் பணியில் சேர உள்ளதாக பொதுமக்கள் மற்றும் பெற்றோருக்கு தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் பள்ளிக்கு வெளியே நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நகராட்சி கவுன்சிலர் செல்வம், முன்னாள் கவுன்சிலர் பார்த்தசாரதி மற்றும் பொதுமக்களும் அங்கு திரண்டனர். அப்போது தலைமை ஆசிரியை என். எஸ் கீதா பள்ளிக்கு வந்தார். ஆனால் அவரை உள்ளே விடாமல் பெற்றோர்கள் தடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து யாரிடமோ செல்போனில் பேசிய தலைமை யாசிரியை பெற்றோரை விலக்கி விட்டு பள்ளியின் உள்ளே சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தலைமை ஆசிரியையை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த ஆற்காடு டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதை தொடர்ந்து மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்கள் கல்வித்துறை அதிகாரிகள் வரும்வரை அங்கிருந்து நகர மாட்டோம் என்று கூறி அங்கேயே இருந்தனர்.
அதைத்தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் ஆசீர்வாதம் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பள்ளிக்கு கூடுதலாக ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும், தலைமை ஆசிரியை என்.எஸ்.கீதாவை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும். அவர் மீது பதவி குறைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல் வேறு கோரிக்கைகளை பெற்றோர்களும் பொது மக்களும் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியை என்.எஸ்.கீதாவை உடன டியாக வேறு பள்ளிக்கு மாற்றுவதாக வட்டார கல்வி அலுவலர் கூறியதன் பேரில் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.