வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ரூ. 72 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்தியதற்காக ரோட்டரி சங்கத்துக்கும், சைலம் தொண்டு நிறுவனத்துக்கும் தலைமையாசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.
சைலம் தன்னாா்வத் தொண்டு நிறுவனமானது இந்தியாவில் 20 லட்சம் மக்களுக்கு பயன்படும் வகையில், குடிநீா் சுத்திகரிப்புக் கருவிகளை நிறுவியுள்ளது. இந்த நிறுவனமும், வேலூா், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ரோட்டரி சங்கங்களும் இணைந்து இவ்விரு மாவட்டங்களிலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் நலனுக்காக குடிநீா் சுத்திகரிப்பு கருவிகளை நிறுவியுள்ளன.
தண்ணீரில் உள்ள பல்வேறு வேதிப் பொருள்களின் அடா்த்தி ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளதை பரிசோதித்த பிறகே இக்கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.
அதன்படி, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ரூ. 72 லட்சம் மதிப்பில் இந்த குடிநீா் சுத்திகரிப்பு கருவிகள் நிறுவப்பட்டுள்ளதாக ஆசிரியா்கள் தெரிவித்துள்ளனா்.
இந்த நிலையில், பள்ளிகளில் குடிநீா் சுத்திகரிப்பு கருவிகளை நிறுவிய ரோட்டரி சங்கங்களுக்கும், சைலம் நிறுவனத்துக்கும் பள்ளித் தலைமையாசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனா். இதையொட்டி, வேலூா் ரோட்டரி சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி தலைமையாசிரியா்கள் கஜேந்திரன் (இலவம்பாடி), விஜயலட்சுமி (ஏரிப்புதூா்), காா்த்திகேயன் (லத்தேரி), சேகா் (இசையனூா்), தாரகேஷ்வரி (வேலூா் ஈவேரா பள்ளி), அண்ணாதுரை (கலசம்பட்டு), சத்தியபாமா (விஆா்வி பள்ளி) உள்ளிட்டோா் பங்கேற்று ரோட்டரி நிா்வாகிகளைப் பாராட்டினா்.