எல்ஐசி ஊழியர்களின் ஆர்ப்பாட்டம்

LIC employees announce two-day strike condemning share sale



எல்ஐசி பங்கு விற்பனை செய்வதை கண்டித்து இம்மாதம் 28, 29 ம் தேதிகளில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக எல்ஐசி ஊழியர்கள் சங்க வேலுார் கோட்ட பொதுச் செயலாளர் ராமன் கூறினார்.

இது குறித்துஅவர், ராணிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எல்ஐசி நிறுவனத்தில் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பங்குகளை விற்பதற்கான ஆவணங்களை பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து 1994ம் ஆண்டு முதல் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் போராடி வருகிறது. மத்திய அரசு வருவாய் தட்டுப்பாட்டால் திணறிக் கொண்டிருக்கிறது. பெரு முதலாளிகள் கார்ப்பரேட் வரியை ஆண்டு தோறும் குறைத்துக் கொண்டே வருவதும், குறைக்கப்பட்ட வரியை கூட அவர்கள் செலுத்தாத நிலையில் வசூலிக்க நடவடிக்கை எடுக்காமல் தள்ளுபடி செய்து வருவதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அவற்றை எல்லாம் சரி செய்வதற்கு பதிலாக பொதுத்துறை நிறுவனங்களை விற்று அரசை நடத்த பார்க்கிறார்கள்.

இப்போது எல்ஐசி வசம் உள்ள அரசின் பங்குகளை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையில் ஒரு ரூபாய் கூட எல்ஐசி க்கு கிடைக்கப் போவதில்லை. அவை அரசின் கஜானாவுக்கு தான் செல்கிறது. செபிக்கு மத்திய அரசு தெரிவித்துள்ள முன்மொழிவில் இது தெளிவாக உள்ளது. இந்த பங்கு விற்பதன் மூலம் எல்ஐசிக்கு எந்த பயனும் இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் எல்ஐசிக்கு வரும் உபரி நிதியில் 95 சதவீதம் பாலிசிதாரர்களுக்கு போனசாக வழங்கப்படுகிறது. இப்போது அது 90 சதவிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பதால் எல்ஐசி நிறுவனத்துக்கோ, பாலிசிதாரர்களுக்கோ, நாட்டுக்கோ எந்த பயனும் இல்லை.

இதனால் இந்த முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். எல்ஐசி பங்கு விற்பனை செய்வதில் எந்த நியாயமும் இல்லை. பட்ஜெட்டில் விழும் நிதிப் பள்ளத்தை ஈடுகட்ட கார்ப்பரேட் வரிகள், செல்வ வரிகளை உயர்த்தாமல் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்று சரி கட்ட நினைக்கும் அரசின் தவறான பாதை.

பங்குகளை விற்பனை செய்வதால் ஒரு லட்சம் எல்ஐசி ஊழியர்கள், 12 லட்சம் எல்ஐசி முகவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே எல்ஐசி பங்கு விற்பனை, இரண்டு வங்கிகள் தனியார் மயம், ஒரு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மயம், ரயில்வே சேவைகளில் தனியார் அனுமதி போன்றவற்றை மத்திய அரசு கை விட வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 5ம் தேதி வேலுார் கோட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலம் மற்றும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. வரும் மார்ச் மாதம் 28, 29 ம் தேதிகள் இரண்டு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வேலுார் கோட்ட தலைவர் பழனிராஜ், தேவராஜ், ரமேஷ்பாபு, குணாளன், சுப்பிரமணி, ஞானசேகரன், பெருமாள், குபேந்திரன், பழனி, தயாநிதி, பரசுராமன், வெங்கடேசன், கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்