ராணிப்பேட்டை நகராட்சியில் உள்ள பல்பொருள் அங்காடியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நுகர்வோர் உரிமைகளை தெரிந்து கொண்டு வியாபாரிகளிடம் ரசீது கேட்டு வாங்குங்கள் பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

வியாபாரிகளிடமிருந்து வாங்கும் பொருட்களுக்கான ரசீதை கேட்டு வாங்க வேண்டும். என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். நுகர்வோர்களுக்கான அடிப்படை உரிமைகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15ம் தேதி உலக நுகர்வோர் தினம். டிசம்பர் 24ம் தேதி தேசிய நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அரசு அலுவலகங்கள் மற்றும் நுகர்வோர் சங்கங்கள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும், நுகர்வோர் மன்றத்தின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, விளையாட்டுப்போட்டி, கிராமிய பாட்டுப்போட்டி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 8ம் தேதி நுகர்வோர் தினம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், ராணிப்பேட்டை நகராட்சியில் உள்ள பல்பொருள் அங்காடியில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது, ஒரு பொருளை வாங்கும்போது அதன் எடை, தரம் ஆகியவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும். என்று பொதுமக்களிடம் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில், நுகர்வோர்கள் தங்களது அடிப்படை உரிமைகளை தெரிந்துகொள்ள வேண்டும். பொருளுக்கான விலைக்கு அதிகமாக கொடுத்து வாங்கக்கூடாது. வியாபாரிகளிடமிருந்து வாங்கும் பொருட்களுக்கான ரசீதை கேட்டு வாங்க வேண்டும். முன்பு வியாபாரிகள் எடை போடுவதில் முறைகேடு செய்து ஏமாற்றி வந்தனர். இதனை தடுக்கும் வகையில் இந்திய அரசு பழைய எடைகளை அகற்றி எலக்ட்ரானிக் எடைகளை கொண்டு வந்ததால் முறைகேடுகள் தடுக்கப்பட்டது.

தற்போது பிரதமர் கொண்டு வந்துள்ள நுகர்வோர் சட்டத்தில் திருத்தம், வாடிக்கையாளர்கள் தரமான பொருட்கள் வாங்குவதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதால் முறைகேடுகள் தடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.