ராணிப்பேட்டை நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் 30 வார்டுகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஜெயிக்க வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான காந்தி' களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி வருகிறார். சில நாட்களாகவே அவர் வெளியிடங்களில் பிரச்சாரம் முடிந்த கையோடு, மாலையில் ராணிப்பேட்டை வந்துவிடுவார். அங்கு இரவு வரை வார்டு, வார்டாக சென்று ஒட்டு கேட்கிறார். 
அமைச்சர் காந்தி போகும் இடங்களில் எல்லாம் அவருக்கு மேள, தாளத்துடன் வரவேற்பு தான். சரவெடி பட்டாசு நகரையே கலங்கடிக்கிறதாம். பெண்கள் திரண்டு வந்து அமைச்சருக்கு ‘ஆரத்தி' எடுக்கும் வைபவங்களும் நடக்கிறது. சம்பந்தப்பட்ட பகுதி வேட்பாளருடன் சென்று வாக்காளர்களிடம் பொறுமையுடன் ஓட்டு கேட்கிறார் காந்தி.

அமைச்சரை 100க்கும் மேற்பட்ட கட்சியினர் பின்தொடர்ந்து செல்கின்றனர். எம்எல்ஏ., எலக் சனில் கூட இவர் இப்படி நடந்ததை பார்க்கவில்லையே என்று நகர மக்கள் பேசிக்கொள்கின்றனர். இந்நிலையில், வரவேற்பெல்லாம் ஓகே.,தான். அவை அனைத்தும் ஒட்டாக மாற வேண்டும். அதிக ஓட்டு வித்தியாசத்தில் திமுக ஜெயிக்க வேண்டும். அத்துடன் தேர்தல் வேலை செய்யாத கட்சியினர் மீது நடவடிக்கை பாயும் என்று கறாராக சொல்லிவிட்டாராம் அமைச்சர்.
இதனால், சில வார்டுகளில் தொய்வாக இருந்த கட்சியினர் மற்றும் 'உள்குத்து' வேலையில் ஈடுபட்டவர்கள்கூட இப்போது களத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இன்னும் மூன்று நாட்களில் தேர்தல் என்பதால், அடுத்து இரண்டு நாட்கள் வாக்காளர்கள் சூப்பர் எஜமானர்களாகவும், வேட்பாளர்கள் சேவகர்களாகவும் இருப்பார்கள் என்பது நிஜம்.

கைகளை கட்டிப்போட்ட தேர்தல் நடத்தை விதிகள் பொதுவாக தனக்கு ‘ஆரத்தி' எடுப்பவர்களுக்கு அள்ளிக்கொடுத்து பழக்கப்பட்டவர் அமைச்சர் காந்தி. ஆனால் இப்போதுள்ள தேர்தல் விதிகள், அமைச்சரின் கைகளை கட்டிப்போட்டுவிட்டதால் அவரால் எதுவும் கொடுக்க முடியவில்லை என்று கட்சித் தொண்டர்கள் சமாளிக்கின்றனர்.