ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட நவல்பூர் கங்காதர நிதி உதவி நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் ஆர்.காந்தி தமது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
அமைச்சர் காந்தியின் மனைவி கமலா காந்தி, தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி, ஷீலா வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி ஆகியோரும் தங்களது வாக்கினை செலுத்தினார்கள்.
கலெக்டர்
ராணிப்பேட்டை நகராட்சி ெரயில்வே ஸ்டேஷன் சாலையில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று காலை சுமார் 8.10 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்.
பின்னர் வாக்காளர்களுக்கு கிருமிநாசினி தெளித்தல், உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.
மேலும் ராணிப்பேட்டை நகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு நடைபெறுவதை தேர்தல் பொது பார்வையாளர் வளர்மதி, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆற்காடு
ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் நகராட்சியில் மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். ஆற்காடு நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகளில் 2 வார்டுகளில் நகரமன்ற உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 28 வார்டுகளில் 56 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஒரு வாக்குச்சாவடி மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுது ஏற்பட்டதால் சிறிதுநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.
ஆற்காட்டில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. வாக்களித்தார்.
மேல்விஷாரம் நகராட்சியில் 42 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் பகுதியில் நடைபெற்ற வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. மொத்தம் 42,707 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 47 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
அம்மூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. மொத்தம் 10,991 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்க 15 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
அம்மூர் பேரூராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.