நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் தரமற்றதாக வழங்கப்படுவதாக குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழித்தட அட்டவணையின் படி எந்த விலகலும் இல்லாமல் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
கூட்டுறவு நியாயவிலை கடைகளுக்கு நகர்வு பணிக்கு பயன்படுத்தப்படும் பொதுவிநியோகத் திட்ட நகர்வு வாகனங்கள் மாதம்தோறும் ரேண்டமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து சரக்கு ஏற்றப்படுவதற்கு முன்னும் பின்னும் எலக்ட்ரானிக் எடை மேடைகளில் எடையிடப்பட வேண்டும். அனைத்து எடை ரசீதுகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் வழங்கப்படும் வழங்கல் ஆணைகள் நகர்வு பணியாளரால் சரிபார்க்கப்பட வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சார்பதிவாளர் (பொது விதி) ஒரு மாதத்தில் குறைந்தது 25% வழங்கல் ஆணைகளை சரிபார்க்க வேண்டும்.
நியாய விலை கடையில் நல்ல தரமான பொருட்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். பொருட்கள் தரமற்றதாக கண்டறியப்பட்டால் அவற்றை டிஎன்சிஎஸ்சி கிடங்கிற்கு திரும்ப அனுப்பி மாற்றி பெறுவதற்கு உடனடியாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
அனைத்து பொது விநியோக திட்ட நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இணக்கமான முறையில் வினியோகம் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கட்டுப்பாட்டு பொருள்கள் POS Billலிருந்து எந்த விலகலும் இன்றி வினியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
நியாயவிலை கடைகளில் சரியான கையிருப்பு, பராமரிப்பு, கணக்குகளை பராமரித்தல் மற்றும் விற்பனை தொகை நாள்தோறும் தலைமையகத்தில் செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
நியாயவிலை கடைகள் சரியான நேரத்தில் திறப்பதை உறுதி செய்ய வேண்டும்.
எந்த ஒரு காரணத்திற்காகவும் எந்த நேரத்திலும் ஒரு விற்பனையாளர் இரண்டு முழு நேர நியாய விலை கடைகளுக்கு மேல் நிர்வகிக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் போதுமான பணியாளர்களை கூட்டுறவு சங்கங்களில் இருந்து பரவல் முறையில் நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.