ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்வு முகாம் நடப்பது வழக்கம். கரோனா ஊரடங்கு காரணமாக இந்த முகாம் நடக்கவில்லை. ஆனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் முகாம் நடக்கும் என்று நம்பி பலர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.

மனு போட்டவர்களில் பலர், இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா? என்று சந்தேகத்துடன் கேட்டனர். அப்போது அங்கிருந்த அலுவலர்கள், உங்கள் மனுக்களுக்கு வரிசை எண் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பார்கள். உங்களுக்கு தகவலும் வரும் என்று நம்பிக்கையூட்டி அனுப்பினர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா மேலகுப்பம் பஞ்.,சாணாரப்பெண்டை, மோட்டூரா பட்டி கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கு தனியாக 100 நாள் பணி ஒதுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் கலெக்டரிடம் புகார் மனுவும் அளித்துள்ளனர்.

இதையடுத்து இப்பகுதி மக்களுக்கு 100 நாள் வேலை கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டுக்கு கொடுக்க வேண்டிய வேலையில் வெறும் 50 நாட்கள் மட்டும் கொடுத்து விட்டு நிறுத்திவிட்டனராம்.

ஆனால் 100 நாள் வேலை கணக்கில் பஞ்.. யூனியன் துவக் கப்பள்ளி பின்புறம் மழைநீர் சேகரிப்பு குட்டை அமைக்கும் பணியை காண்ட்ராக்டரை வைத்து செய்துவிட்டு 100 நாள் வேலை என்று கணக்கு காட்டியிருப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ரூ.31 ஆயிரம் செலவில் நடந்ததாக கூறப்படும் இந்த பணியை  கலெக்டரும், ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நரும் ஆய்வு செய்ய வேண்டும்.

முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம மக்களுக்கு 100 நாள் வேலையை தொடர்ந்து தர வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்தனர். ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தவர்களுக்கு மக்களை தேடி மருத்துவ திட்ட குழுவினர் சர்ககரை அளவு, ரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனைகளை செய்தனர்.