ராணிப்பேட்டையில் வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற தலைப்பில் இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட வ.உ.சிதம்பரனார், பாரதியார் வீரமங்கை வேலுநாச்சியார் உள்ளிட்ட தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் பெருமைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி வேலூர் மாவட்டத்தில் இருந்து இன்று மாலை ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்தது.
ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான சிக்கராஜபுரம் பகுதியில் அலங்கார ஊர்தி வந்தபோது மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்யன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று அலங்கார ஊர்தியை பாரம்பரிய கோலாட்டம் மேளதாளங்கள் முழங்க மலர் தூவி வரவேற்றனர்.
இந்த வாகன ஊர்தி நாளை பொதுமக்களும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களும் கரோனா நோய்த்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளுடன் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து மாவட்ட எல்லைப் பகுதியான ஆற்காடு அடுத்த தாமரைப்பாக்கம் பகுதி வழியாக நாளை மாலை திருவண்ணாமலை மாவட்டம் செல்ல உள்ளது.