ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளியில்படித்து மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவ-மாணவிகளை கலெக்டர் பாராட்டினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்து தமிழக அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ள 7 மாணவ - மாணவிகளை வரவழைத்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில் இந்த 7 மாணவ - மாணவிகள் மூலம் மாவட்டத்திற்கு பெருமை கிடைத்துள்ளது. இந்த மாதிரியான வாய்ப்பு அனைவருக்கும் எளிதாக கிடைக்காது. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. ஆகவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நன்றாக படித்து சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும். ஒரு ஏழையின் கண்ணீரை நம்மால் துடைக்க முடியும் என்றால் அதைவிட புண்ணியம் வேறு எதுவும் இல்லை.

இந்த வாய்ப்பு உங்களுக்கெல்லாம் தமிழக அரசு பிறப்பித்த உள் ஒதுக்கீட்டில் கிடைத்துள்ளது. உங்கள் படிப்புக்காக அரசாங்கம் செலவழிக்கின்ற பணத்தினை நீங்கள் மக்களுக்கு சேவை மூலமாக வழங்க வேண்டும். உங்களை படிக்க வைத்த பெற்றோர்களுக்கும், உங்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.