காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்கள் இரவு பணி முடிந்தும் நேற்று அதிகாலை தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ்சில் வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பஸ் தக்கோலத்தை அடுத்த கேசாவரம் சோதனை சாவடி அருகே சென்றபோது டிரைவரின் தூக்க கலக்கம் காரணமாக முன்னே சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த 17 ஊழியர்கள் காயம் அடைந்தனர்.

அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விபத்து குறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.