ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையத்தில் இருந்து 2 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை கொடியசைத்துத் தொடக்கி வைத்த அமைச்சா் ஆா்.காந்தி.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 23-ஆம் தேதி சென்னை சிட்லபாக்கத்தில் பொது மக்களின் பயன்பாட்டுக்காக அனைத்து மாவட்டங்களுக்கும் மொத்தம் 188 புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை வாகனங்களை வழங்கினாா். இதில், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 2 புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, 2 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்திலிருந்து, தமிழக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே 17 எண்ணிக்கையிலான 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது இந்த 2 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்பட மொத்தம் 19 வாகனங்கள் மாவட்டத்தில் செயல்பாட்டில் உள்ளன.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ ஜே.எல்.ஈஸ்வரப்பன், துணை இயக்குநா் (சுகாதாரம்) மணிமாறன், 108 ஆம்புலன்ஸ் வாகன மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜகணபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.