ராணிப்பேட்டை மாவட்டம் தெங்கால் அருகே பொன்னையாறும், பாலாறும் கூடும் இடத்தில் பல குடிநீர் கிணறுகள் அமைக் கப்பட்டுள்ளன.
இந்த கிணறுகளிலிருந்து வேலுார், மேல்விஷாரம், பெல் தொழிற்சாலை, பெல் டவுன்ஷிப் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பல கிராமங்களுக்கு குடிநீர் சப்ளையாகிறது. இந்நிலையில் பெல் தொழிற்சாலை, பெல் டவுன்ஷிப், தெங்கால், அவரைக்கரை, நவ்லாக், மணியம்பட்டு, மேட்டுத் தெங்கால், நரசிங்கபுரம், பெரிய தாங்கல், நரசிங்கபுரம் காலனி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் எடுக்கப்படும் பெரிய கிணற்றில் இணைக்கப்பட்டிருந்த பிரதான பைப்புகள் நான்கை நேற்று முன் தினம் இரவு விஷமிகள் சிலர் வெட்டி எடுத்துவிட்டனர். மேலும் பம்ப் ஆபரேட்டர் அறையிலிருந்து பைப்புகளையும் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தெங்கால் பஞ்., தலைவர் இந்திராவும் முன்னாள் தலைவர் பத்மநாபனும் கூறும் போது,
'சமூக விரோதிகளால் குடிநீர் சப்ளைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. யாரும் எதுவும் செய்யமாட்டார்கள் என்கின்ற நம்பிக்கையில் ஆற்றில் பைப்லைன்கள் அமைக் கப்பட்டுள்ளன. ஆனால் மனச் சாட்சி இல்லாமல் இப்படி செய்து விட்டார்களே என்று வேதனை தெரிவித்தனர். ஒருங்கிணைந்த நவ்லாக் அரசு பண்ணைகளில் அடிக்கடி திருடு போவதாகவும், கம்பி வேலிகளை கூட வெட்டி எடுத்துச்செல்கின்றனர் என்று கடந்த மாதம் கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் சரமாரி புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நவ்லாக் பண்ணையிலும் பைப்புகள் மற்றும் பல பொருட்கள் திருடுபோயுள்ளதாகவும் கூறப்படுகிறது. நவ்லாக் பண்ணை, ஆற்றில் உள்ள குடிநீர்சி கிணறுகள், பைப்லைன்களுக்கும், மின் வயர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் செய்ய வேண்டும். போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.