அரக்கோணம் அடுத்த காவனுாரை சேர்ந்த 45 வயது வாலிபர் ஒருவர் சென்னை ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் ரயிலில் வேலைக்கு சென்றுவிட்டு அரக்கோணத்தில் இருந்து பைக்கில் வீட்டுக்கு செல்வது வழக்கம்.
அதேபோல் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு பைக்கில் சென்றார். வீட்டின் அருகில் செல்லும் போது திடீரென பைக் நின்றுபோனது. இதனால் பைக்கை அவர் பலமுறை உதைத்து பார்த்தும் ஸ்டார்ட் ஆகவில்லை. பைக்கின் பிளக்பாயின்ட் மற்றும் டேங்கில் பெட்ரோல் இருக்கிறதா என்பதை சரிப்பார்த்துள்ளார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பைக் ரிப்பேராகி நிற்கிறது. அதை சரி செய்கிறார் என்று நினைத்து கடந்து சென்றுள்ளனர். இந்நிலையில் பலமுறை உதைத்தும் பைக் ஸ்டார்ட் ஆகாததால் ஆத்திரத்தில் பெட்ரோல் டேங்கை திறந்து தீக்குச்சியை கிழித்து டேங்க்கில் போட்டுள்ளார். இதில் பைக் குபீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதன்பிறகே பைக் ஸ்டார்ட் ஆகாத ஆத்திரத்தில் வாலிபரே பைக்கை தீ வைத்து கொளுத்தியது அப்பகுதி மக்களுக்கு தெரிந்தது.
இதில் பைக் முழுவதுமாக எரிந்து எலும்புக் கூடானது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.