ராணிப்பேட்டை: தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததையடுத்து திங்கள்கிழமை வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண மற்றும் தற்செயல் தேர்தல் நடைமுறைகள் 16 ஆம் தேதி சனிக்கிழமை முடிவடைவதால், தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் முடிவுக்கு வருகிறது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனி குமார் அறிவித்துள்ளார்.
இதையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெறும். பொதுமக்களிடமிருந்து மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாக பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிய உள்ளார். ஆகவே பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மனுக்களை எழுதி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வழங்கலாம்.
கோரானா நோய்த் தொற்று பாதுகாப்பு நடைமுறைகளான முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி, கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்ற நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் மனுக்களை வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.