அரக்கோணம் அருகே ஓய்வுபெற்ற வங்கி அலுவலரை தாக்கி லேப்டாப், எல.இ.டி. டிவியை மர்ம நபர்கள் கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பால்வாய் கிராமத்தை சேர்ந்தவர அனந்தகிருபாகரன் (வயது 63). இவர் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி ரேணுகா அரசு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி இருந்து ஓய்வு பெற்றவராவர்.
இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவின்போது வீட்டில் இருந்த நாய் குரைக்கும் சத்தம் கேட்கவே அனந்தகிருபாகரன் வெளியே வந்து பார்த்தார்.
அப்போது யாரும் இல்லாததால் நாயை கட்டி வைத்து விட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார். ஆனால் மர்ம நபர்கள் வீட்டின் பின்புறமாக ஏணியை வைத்து வீட்டு மாடியில் ஏறி அறைக்குள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த லேப்டாப் மற்றும் எல்.இ.டி. டி.வி. ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்தபோது நாய் குரைத்தது.
இதனால் அனந்தகிருபாகரன் மீண்டும் எழுந்து வெளியே வந்து கதவை திறந்து பார்த்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் அனந்தகிருபாகரனை உருட்டுக்கட்டையால் தலையில் தாக்கினர்.
அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி ரேணுகா வெளியே ஓடிவந்து கேட்டின் அருகில் பார்த்து தடுக்க முயன்றார். அப்போது மறைந்திருந்த மர்ம நபர்கள் ரேணுகாவையும் கையில் கத்தியால் வெட்டினர். இதில் அவரது ஆள்காட்டி விரலில் வெட்டுப்பட்டது.
இருவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
காயம் அடைந்த தம்பதிய அங்கு வந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும், இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.