திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நாச்சார் குப்பம் பகுதியில் வசித்து வருபவர் பிரபு. இவரது மனைவி காயத்ரி. இவர் பி. சி. ஏ பட்டதாரி ஆவார். இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளன. காயத்ரி ஆம்பூர் அருகே சோலூர் பகுதியில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றார். 

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாச்சார் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பெண் வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனால் பட்டதாரி பெண்ணான காயத்ரி தேர்தலில் போட்டியிட்டார்.

மாதனூர் ஊராட்சி ஒன்றியம் நாச்சார் குப்பம் ஊராட்சியில் மொத்தம் 2200 வாக்காளர்கள் உள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 9 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு காயத்ரி உட்பட 4 பேர் போட்டியிட்டனர். இதில் காயத்ரி 890 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: -

தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்களை கிராம மக்களுக்கு கொண்டுச்சென்றும் குடிநீர் பிரச்சனை, பஸ் வசதி மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர பாடுபடுவேன். என்னுடைய மாமனார் இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். அவர் இந்த ஊராட்சிககு பல நல்ல வேலைகளை செய்துள்ளார். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாச்சார் குப்பம் ஊராட்சிமன்ற தலைவர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. நான் அதனை பயன்படுத்தி தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்டியிட்டேன். கிராம மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்தனர். அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப்ப பணிகள் செய்து முடிப்பேன். மேலும் தேர்தலில் வாக்களித்து வெற்றியை தந்த அனைத்து வாக்காளர்களுக்கு நன்றியை தேர்வித்தார்.