அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உளியம்பாக்கம் கிராமத்தில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை நடைபெறுகின்றது. இந்த திட்டத்தில் ஏழை விவசாய கூலி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த பணிகளை மேற்பார்வை செய்து வரும் விஜயா என்பவர் வயதில் மூத்தவர்களை தரக்குறைவாக பேசுவதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த 50 க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் மற்றும் அரக்கோணம் ஒன்றிய பாஜக விவசாய அணி தலைவர் ஜெ. ஷியாம் குமார் ரெட்டி உள்ளிட்டோர் தணிகைபோளூரில் உள்ள அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப் கென்னடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் செய்து மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.