தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதால் படிப்படியாக கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது. இதையடுத்து ஊரடங்கு காலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு பஸ் போக்குவரத்து கடந்த ஜூன் மாதம் முதல் தொடங்கியது.
ஆனாலும் அரசு குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து குளிர்சாதன பஸ்களை விரைவில் தமிழகத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிற்கு பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதுகுறித்து பரிசீலனை செய்து வருகிற 1-ந்தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் அரசு குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படும் என உறுதி அளித்தார்.
அதன் படி 1-ந் தேதி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏ.சி. பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் முககவசம் அணிய வேண்டும் என்றும், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஏ.சி. பஸ்களின் சேவை தொடங்கப்பட இருப்பதால் ஏ.சி. பஸ்களை தயார் செய்யும் பணிகளில் போக்குவரத்து பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனையில் உள்ள ஏ.சி. பஸ்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது.