ஆற்காட்டில் வருகிற 30ம் தேதி வரை குடிநீர் விநியோகம் நடைபெறாது என்று நகராட்சி ஆணையர் அருள்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஆற்காடு நகராட்சி ஆணையர் அருள்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட வார்டு 1 முதல் 30 வரையிலான பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் வேப்பூர் தலைமை நீரேற்று நிலையத்தில் 250 கே.வி.ஏ மின்மாற்றி நேற்று முன்தினம் பழுதடைந்தது.
அதனை பழுது நீக்கம் செய்யும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எனவே, ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வருகிற 30ம் தேதி வரை குடிநீர் விநியோகம் சப்ளை நடைபெறாது.
எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.