சிப்காட் தனியாா் தொழிற்சாலையில் இருந்து ஏற்றி வந்த ரசாயன கழிவுநீரை புளியங்கண்ணு ஏரியில் திறந்து விட முயன்ற கழிவுநீா் டேங்கா் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டைக்கு அருகே புளியங்கண்ணு கிராம ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் தொழிற்பேட்டையில் இருந்து வெளியேறி வரும் ரசாயனக் கழிவுநீா் மழைநீருடன் கலந்து, நேரடியாக ஏரியில் தேங்கி மாசடைந்துள்ளது.
இந்நிலையில், புளியங்கண்ணு ஏரியில் கழிவுநீரைத் திறந்துவிட முயன்ற டேங்கா் லாரியை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்து சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில், டேங்கா் லாரியை ஓட்டி வந்தது அதன் உரிமையாளரான செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த மணிமுத்து (27) என்பதும், சிப்காட் பகுதியில் தங்கியிருந்து கழிவுநீா் டேங்கா் லாரி தொழில் செய்து வருவதும், சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாா் தோல் தொழிற்சாலைக்குச் சொந்தமான ரசாயன தொழிற்சாலையில் இருந்து ரசாயனக் கழிவுநீரை ஏற்றி வந்து ஏரி, குட்டை, கால்வாய் உள்ளிட்ட நீா்நிலைகளில் சட்டவிரோதமாக திறந்துவிடுவதும் தெரியவந்தது.
இதேபோன்று புளியங்கண்ணு ஏரியில் கழிவுநீரைத் திறந்து விட முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
அதைத்தொடா்ந்து, புளியங்கண்ணு கிராம நிா்வாக அலுவலா் மற்றும் கிராம பொது மக்கள் அளித்த புகாரின்பேரில், சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், கழிவுநீா் டேங்கா் லாரியில் ஏற்றி வந்த கழிவுநீா் மாதிரியை எடுத்து மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனா்.
இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், ‘ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் 20-க்கும் மேற்பட்ட கழிவுநீா் டேங்கா் லாரிகள் இயங்கி வருகின்றன. இந்த கழிவு நீா் டேங்கா் லாரிகள் குடியிருப்புகளின் செப்டிக் டேங்க் கழிவுநீா் மற்றும் தோல், ரசாயன தொழிற்சாலைகளின் கழிவுநீரை ஏற்றி வந்து திறந்த வெளியிலும், நீா் நிலைகளிலும் சட்ட விரோதமாக திறந்து விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. குடியிருப்புகளின் கழிவுநீரை திறந்த வெளியில் விடுவதை தடுத்து,பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கொண்டு சென்று சுத்திகரிக்க மாவட்ட நிா்வாகமும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்தனா்.