அமைவிடம் :
பகவதி அம்மன் திருக்கோயில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா எனும் முக்கடல்கள் கூடுமிடத்தில், இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது. சக்தி பீடங்களில் ஒன்று. தென்கோடியில் அமைந்த மிக சிறந்த சுற்றுலா தலம் இது.
மாவட்டம் :
அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்.
எப்படி செல்வது?
சுற்றுலா தலம் என்பதால் தென்தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களிலிருந்து கன்னியாகுமரிக்கு நிறைய பேருந்து வசதி உள்ளது.
கோயில் சிறப்பு :
இந்த கோவிலில் வீற்றிருக்கும் தேவியை குமரி அம்மன், கன்னியாகுமரி அம்மன், துர்க்கை அம்மன், பகவதி அம்மன் என்று பல பெயர்களில் அழைப்பார்கள்.
ஒளிமிக்க பகவதி அன்னையின் மூக்குத்தி யோகசக்தியின் வெளிப்பாடு என்பதால் பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது.
கடல் முனையில் இருந்தாலும் கோயிலுக்குள் உள்ள கிணற்றில் உப்புக் கரிக்காத நல்ல தண்ணீர் கிடைக்கிறது என்பது அதிசயம்.
சில பௌர்ணமி நாளன்று, இக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும், முழுமதி கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாம்.
அம்மனின் சக்தி பீடங்களில் இது குமரி பீடமாகும். தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடமாக இந்த இடம் கருதப்படுகிறது.
குமரி முனையின் கிழக்கே கடலில் இரண்டு அழகிய பாறைகள் உள்ளன. அதில் பெரிய பாறை சுமார் 3 ஏக்கர் பரப்பும், கடல் மட்டத்தில் இருந்து 55 அடி உயரமும் உடையது. அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற அடையாளம் காணப்படுகிறது. அதை தேவியின் திருப்பாதம் என்று அழைக்கிறார்கள்.
கோயில் திருவிழா :
நவராத்திரி திருவிழா, வைகாசி விசாகம், தெப்போற்சவம் - 10 நாட்கள். இத்திருவிழா நாட்களில் காலையிலும், இரவிலும் ஊர் தெரு வழியாகத் தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். ஒன்பதாவது நாள் தேர்த்திருவிழாவும், பத்தாவது நாள் தெப்பத்திருவிழாவுமாகும். தெப்பத் திருவிழாவன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவியின் திருவுருவம் நீரின் மேல் வலமாக மிதப்பில் கொண்டு செல்லப்படும்.
பிரார்த்தனை :
இத்தலத்தில் கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும். காசிக்கு போகிறவர்களுக்கு கதி கிடைக்க வேண்டுமாயின் இக்கன்னியாகுமரிக்கு வரவேண்டுமென்று நம் புராணம் முறையிடுகிறது. இது சிறந்த தீர்த்தத் துறையையுடைய புண்ணிய கடற்கரையாகும் என்பதால் இங்கு நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும்.
நேர்த்திக்கடன் :
அம்மனுக்கு விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாற்றுதல், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திக்கடன்களாக செய்கின்றனர். இங்குள்ள கடற்கரையில் பக்தர்கள் தங்கள் காலம் சென்ற மூதாதையர்களுக்கு காரியம் செய்ய எள்ளும், தண்ணீரும் இறைத்து பிதுர்கடன் செய்கிறார்கள்.