ராணிப்பேட்டை மாவட்டத்தில் அம்மூரில் நேற்று முன்தினம் 64 மி.மீட்டர் மழை பொழிந்தது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதே நேரத்தில் இரவு நேரங்களில் திடீர் மழை பெய்தும் வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப் பட்டது. தொடர்ந்து, மாலை 5 மணியளவில் வானத்தில் கருமேகக் கூட்டம் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டது. பின்னர், குளிர் காற்றுடன் பலத்த இடியுடன் மழை பொழிந்தது.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இரவு 8 மணி வரை மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கால்வாய்கள் வழியாக குளம், குட்டைகளில் தேங்கியது. வாலாஜா, காவேரிப்பாக்கம், சோளிங்கர், பாணாவரம், மகேந்திரவாடி, நெமிலி, ஆற்காடு, கலவை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வரும் திடீர் மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரில் நேற்று முன் தினம் அதிகபட்சமாக 64 மி.மீட்டர் மழை பதிவானது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் மி.மீட்டரில்:
அரக்கோணம்:6.2,
ஆற்காடு- 5,
காவேரிப்பாக்கம்- 15,
சோளிங்கர்- 26,
வாலாஜா- 7,
அம்மூர்- 64,
கலவை- 48.2.
மாவட்டத்தின் மொத்த மழை அளவு:171.4, சராசரி மழை அளவு: 24.4.