👉 1913ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிஸ்சந்திரா வெளியானது.
முக்கிய தினம் :-
உலக பத்திரிக்கை சுதந்திர தினம்
📝 பத்திரிக்கை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. 1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் மே 3ஆம் தேதி பத்திரிக்கை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
📝 மனித உரிமைகள் சாசனம் பகுதி 19-ல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
📝 அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பத்திரிக்கை சுதந்திரம் இருக்க வேண்டும் என யுனெஸ்கோ கூறுகிறது. மேலும் பத்திரிக்கையையும், பத்திரிக்கை சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் கூறுகிறது.
நினைவு நாள் :-
ஜாகீர் உசேன்
🌟 இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவரான ஜாகீர் உசேன் 1897ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி தெலுங்கான மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார்.
🌟 இவர் சுதந்திரப் போராட்ட இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார். ஆதாரக் கல்வி முறை குறித்தும், கல்வி வளர்ச்சி பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார். பிளேட்டோவின் 'குடியரசு' நூலை உருது மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
🌟 காந்திஜி அழைப்பின் பேரில் இந்திய உயர்நிலைப் பள்ளிக் கல்வி வாரியத் தலைவராக பொறுப்பேற்றார். கல்வி சீர்திருத்தத்திற்காக பல திட்டங்களை வகுத்தார். யுனெஸ்கோ நிர்வாக வாரிய உறுப்பினராக பணியாற்றினார்.
🌟 1956ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே பீகார் மாநில ஆளுநராகப் பதவியேற்றார். 1962ஆம் ஆண்டு குடியரசு துணைத் தலைவராகவும், 1967ஆம் ஆண்டு இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'இந்தியா என் வீடு. இந்தியர்கள் அனைவரும் எனது குடும்பத்தினர்' என்று கூறியவர்.
🌟 இவருக்கு பத்ம விபூஷண் விருதும் (1954), பாரத ரத்னா விருதும் (1963) வழங்கப்பட்டுள்ளது. நவீன இந்தியாவை வழிநடத்தியவர்களில் ஒருவரான ஜாகீர் உசேன் தனது 72வது வயதில் 1969ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி மறைந்தார்.
பிறந்த நாள் :-
ஜேம்ஸ் ஜோசப் ப்ரௌன்
🎤 சோல் இசையின் தந்தை ஜேம்ஸ் ஜோசப் ப்ரௌன் (James Joseph Brown) 1933ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி தென் கரோலினாவில் (அமெரிக்கா) உள்ள பார்ன்வெலில் பிறந்தார்.
🎤 இவர் இருபதாம் நூற்றாண்டின் இசையின் போக்கை மாற்றியமைத்தவர்களில் மிக முக்கியமானவர். மேலும், பலத்த குரலில் பாடுவது, பாடிக்கொண்டே நடனம் ஆடுவது போன்று தனக்கென தனித்தன்மையை பெற்றிருந்தார்.
🎤 பாடகர், பாடலாசிரியர், பாடற்குழுத் தலைவர், பாடல் தயாரிப்பாளர் என்று பல முகங்களைக் கொண்டவர். இதுமட்டுமல்லாமல் ராக், ஜாஸ், டிஸ்கோ, டான்ஸ், இலத்திரனிசை, ரெகே, ஆஃப்ரோ-பீட், ஹிப் ஹாப் போன்ற இசை முறைகளிலும் இவர் தனது சுவட்டைப் பதித்துச் சென்றுள்ளார்.
🎤 திரைப்படத் துறையிலேயே கடுமையாக உழைக்கும் மனிதன் என்ற பெயர் கொண்ட இவர் தனது 73வது வயதில் (2006) மறைந்தார்.
சுஜாதா
✍ தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா 1935ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் எஸ்.ரங்கராஜன்.
✍ 1962ஆம் ஆண்டு இவருடைய, இடது ஓரத்தில் என்ற சிறுகதை குமுதம் என்ற இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. அதன் பிறகு தன் மனைவி பெயரான சுஜாதா-வின், பெயரை தன் புனைப்பெயராக வைத்துக் கொண்டார்.
✍ இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.
✍ சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி இவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்த இவர் தனது 72வது வயதில் (2008) மறைந்தார்.