தருமபுரி மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கார்த்திகா வேறு பணிக்கு மாறுதல் செய்யப்பட்டார். இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.திவ்யதர்சினி தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவர், 2011-ம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. இளநிலை பட்டமாக சட்டப் படிப்பும், முதுநிலை பட்டமாக பொது நிர்வாகமும் பயின்றவர். 2012-13-ம் ஆண்டில் கோவையில் உதவி ஆட்சியராகவும், 2013-15-ம் ஆண்டில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கோட்டாட்சியராகவும் பணியாற்றி யுள்ளார். 2016-ம் ஆண்டில் தமிழக அரசின் உள்துறையில் துணை செயலராகவும், 2017-ம் ஆண்டில் பொதுத் துறையின் செயலராகவும் பணியில் இருந்துள்ளார்.
மேலும், சென்னை மாநக ராட்சியில் வடக்கு மண்டல துணை ஆணையராகவும் பணியாற்றி யுள்ளார். அதன்பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அங்கிருந்து திருச்சி மாவட்டத்துக்கு மாறுதலாகிச் சென்றவர் தற்போது தருமபுரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.
‘தற்போது கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகள் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைகள் தொடர்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பின்னர், மாவட்டத்தின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.