தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கு காரணமாக வெளிநாடு, வெளிமாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கு இ-பதிவு நடைமுறை அமல் படுத்தப்பட்டுள்ளது.

இதனால் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பொன்னியம்மன் பட்டறையில் காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் நேற்று மாவட்ட எல்லையான பொன்னியம்மன் பட்டறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 55 இரு சக்கர வாகனங்கள், 15 நான்கு சக்கர வாகனங்களில் போலீசார் சுழற்சி முறையில் ரோந்து பணியிலும், மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பிற்பகல் 1 மணிவரை முககவசங்கள் அணியாமல் வந்த 102 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 86 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வெளி மாட்டங்களில் இருந்து வருபவர்கள் இ-பதிவு செய்து இருந்தால் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றனர். எனவே பொது மக்கள் நோய் தொற்றை தடுக்க, அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்கி, கொடிய நோயில் இருந்து அனைவரும் விடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரக்கோணம் துணைபோலீஸ் சூப்பிரண்டு மனோகரன், காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் உள்பட பலர் உடன் இருந்தனர்.

அதேபோன்று சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ராணிப்பேட்டை - வேலூர் மாவட்ட எல்லையான சீக்கராஜபுரம் வாகன சோதனை சாவடியிலும் போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு கொரோனா நோயிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகளையும், பாதுகாப்பான முறையில் வாகன தணிக்கை செய்யவும் அறிவுரைகளை வழங்கினார்.‌