ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் கடந்த திங்கட்கிழமை அன்று மேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவருடைய மனைவி கலாவதி (வயது 52) கொரோனா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இதனால் ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள், டாக்டர்கள் மற்றும் நர்சுகளை தரக்குறைவாக பேசி ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. 

பணிகளை புறக்கணித்து போராட்டம்

இதனை கண்டித்து டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் தங்களுக்கு பாதுகாப்பில்லையென கூறி பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது.

இதுபற்றி தகவலறிந்ததும் அரக்கோணம் உதவி கலெக்டர் சிவதாஸ், தாசில்தார் பழனிவேல் ராஜன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது உரிய பாதுகாப்பு வழங்குவதாக உறுதியளித்து, தாக்குதல் நடத்திய நபரை கைது செய்வதாக கூறினர். அதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்கள். டாக்டர்கள் நர்ஸ் மற்றும் ஊழியர்கள் திடீரென மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாக்கவில்லை

இது குறித்து இறந்த கலாவதியின் மகன் கோகுல் கூறுகையில் எனது அம்மாவிற்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் இறந்திருக்க மாட்டார்களே என்றுதான் கேட்டோம், யாரையும் தாக்கவில்லை. ஆனால் ஊழியர்களை தாக்கியதாக கூறுகிறார்கள் என்றார்.