ஆற்காட்டில் சுகாதார சீர்கேடு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடிமின்னல் காற்றுடன் கூடிய பலத்த கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இதனால் அதிகமான மக்கள் கொரோனா தொற்று நோய் 2வது அலை பரவாமல் இருக்க வீட்டில் இருந்தாலும் புழுக்கத்துடன் தவித்து வந்தனர். இந்நிலையில் ராணிப்பேட்டை, சிப்காட், அம்மூர், லாலாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென இடி மின்னல் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த பலத்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கோடை வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது. சில்லென்று காற்றும் வீசியது. இதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இந்த வெயிலின் தாக்கம் வரும் 29ம் தேதி வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆற்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. மேலும் கடந்த சில நாட்களாக அதிக அளவு வெயிலின் தாக்கம் இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை முதலே கடுமையான வெயிலால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென பலத்த காற்று வீசியது. அதனைத் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஆற்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல் வேறு பகுதிகளில் இந்த திடீர் கோடை மழையால் கடும் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.
மேலும் ஆற்காடு அண்ணாசிலை, விநாயகர் தெரு உட்பட பல்வேறு இடங்களில் கால் வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீருடன் கழிவு நீர் தேங்கி சாலையில் ஓடியதில் துர்நாற்றம் வீசியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.